search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    கொரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

    தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்.
    திருப்பூர்:
     
    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு அரசு சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:-
    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த 17 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த 134 குழந்தைகள் என மொத்தம் 151குழந்தைகளுக்கு நிவாரணம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தோம். 

    அதில் இரு பெற்றோரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என  ரூ.15 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 
    தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்.  

    குழந்தைகள் 18 வயது நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரின் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கப்படும். 

    பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலர்கள் ஆதரவில் வளரும் குழந்தையின் பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.

    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை நாங்களே கண்டறிந்து அரசின் நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.  இருப்பினும் இது போன்ற குழந்தைகள் தங்கள் பகுதியில் இருப்பது தெரிய வந்தால் 0421-2971198 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் முகவரியை தெரிவித்தால் விசாரணை நடத்தி நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். 

    தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தாய்-தந்தையை இழந்த குழந்தைகளில் 158 பேர் நிவாரண தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×