search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குற்றச்சம்பவங்களை தடுக்க தேவனூர்புதூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

    பல்வேறு காரணங்களால் கூடுதலாக புறக்காவல் நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    உடுமலை:
     
    உடுமலை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில் 18 ஊராட்சிக்குட்பட்ட 40 கிராமங்கள் இருந்தன. திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும் கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பூர் மாவட்ட கிராமங்கள் பிரிக்கப்பட்டு குடிமங்கலம் போலீசில் சேர்க்கப்பட்டன. தற்போது குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில் 23 ஊராட்சிகளுக்குட்பட்ட 96 கிராமங்கள் உள்ளன. அதிகளவு கிராமங்கள் மற்றும் எல்லை காரணமாக குடிமங்கலம் போலீசார் குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

    கிராமங்களில் முறைகேடாக ‘சில்லிங்’ மது விற்பனை தடையில்லாமல் நடக்கிறது. பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு கிராமங்களை பிரித்து புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    புறக்காவல் நிலையம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களால் கூடுதலாக புறக்காவல் நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தளி போலீஸ் கட்டுப்பாட்டிலும் கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. தற்போது 45க்கும் அதிகமான கிராமங்கள் தளி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனப்பகுதியிலுள்ள ஆறு மலைவாழ் கிராமங்களும் உள்ளடங்கும். 

    போலீஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவு தள்ளி அமைந்துள்ள கிராமங்களில் குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேவனூர்புதூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது.

    தற்போது தேவனூர்புதூரில் இரு மாவட்ட எல்லையில் வாகன தணிக்கைக்காக நிரந்தர சோதனைச்சாவடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதை புறக்காவல் நிலையமாக தரம் உயர்த்தி போலீசார் நியமிக்க வேண்டும். இதனால் அப்பகுதியில், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×