search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும்- ராமதாஸ்

    தற்காலிக பின்னடைவை மட்டும் அடிப்படையாக வைத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு அவசியத் தேவையான கல்விக் கடனை மறுக்கக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மந்த நிலையை காரணம் காட்டி கல்வி கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகள் தயங்குவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. கொரோனா பாதிப்புகளால் பெற்றோர்களின் சராசரி வருமானம் குறைந்திருப்பது உண்மை தான் என்றாலும், தற்காலிக பின்னடைவை காரணம் காட்டி, குழந்தைகளின் கல்வி வாய்ப்பை பறிப்பது நியாயமற்றதாகும்.

    இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதற்கான முக்கியக் காரணங்களில் குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும், தேவையானவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுவதும் தான். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள ரூ.94,000 கோடி கல்விக்கடனில், 21.50 சதவீத அதாவது ரூ.20,200 கோடி தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடன்களைப் பெறுவதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் வகித்து வருகிறது.

    இப்போது ஏற்பட்டுள்ள தற்காலிக பின்னடைவை மட்டும் அடிப்படையாக வைத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு அவசியத் தேவையான கல்விக் கடனை மறுக்கக் கூடாது.

    தமிழ்நாட்டில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு விட்டன. சி.பி. எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன. அவற்றில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி வாய்ப்பு பெறும் மாணவ, மாணவிகள் அவற்றை பயன்படுத்திக் கொள்வது வங்கிகள் வழங்கும் கல்விக்கடனைப் பொறுத்தே உள்ளது.

    எனவே, வங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் கல்விக் கடன்களை வழங்க வேண்டும். வங்கிகளுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளித்து, எந்த மாணவருக்கும் வருமானம் குறைவு போன்ற காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படாமல் வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×