search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு-திருப்பூர் பின்னலாடை துறையினர் களமிறங்க வேண்டுகோள்

    தற்போது வைரஸ் எதிர்ப்பு ஆடைகளுக்கு உலக அளவில் மவுசு அதிகரித்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் அனைவரும் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் விரைந்து களமிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:

    சமீபகாலமாக உலக அளவில் மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடை ரகங்களே கோலோச்சி வருகின்றன. சில ‘பினிஷிங்’ மூலமாகவும்கூட ஆடைகளுக்கு மதிப்பு கூட்டுதல் அளிக்க முடியும்.

    குளிர் காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சி அளிக்கும் ஆடை, வைரஸ் தொற்றாத ஆடை, வியர்வை உறிஞ்சும் ஆடை என அடுக்கிக்கொண்டே போகலாம். சாயமேற்றியபின் சில ரசாயனங்களை பயன்படுத்தி துணிகளின் தன்மை மாற்றப்படுகிறது.தற்போது வைரஸ் எதிர்ப்பு ஆடைகளுக்கு உலக அளவில் மவுசு அதிகரித்துள்ளது. 

    இவ்வகை ஆடைகளின் மேற்பரப்பில் வைரஸ்கள் பட்டவுடனேயே வைரஸ் உடைந்து செயலிழந்துவிடும். உள்ளாடைகளுக்கு பூஞ்சை எதிர்ப்பு தன்மை அளிப்பதும் மிக முக்கியமான மதிப்பு கூட்டுதலாக உள்ளது.

    கடந்த காலங்களில் ரசாயனங்களை கொண்டே பூஞ்சை எதிர்ப்பு தன்மையுள்ள ஆடைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது இயற்கை பொருட்களை கொண்டு அதிகளவில் இவ்வகை ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைப்பதில் அனைத்து நாட்டினரும் மிகுந்த ஆர்வம்காட்டுகின்றனர்.

    அவ்வகையில் ரசாயனங்களுக்கு மாற்றாக இயற்கை சாயமேற்றப்பட்ட ஆடைகள் உலகளாவிய மக்கள் மத்தியில் அதிகம் விரும்பி அணியப்படுகின்றன. மரங்களின் பட்டை, இலை, பூக்களிலிருந்து சாயம் பிரித்தெடுக்கப்பட்டு துணிகளுக்கு நிறமேற்றப்படுகிறது; இதுவும்கூட ஒரு மதிப்புக்கூட்டுதல்தான். சாதாரண ஆடை தயாரிப்பு என்பது சந்தையில் வியாபாரிகள், நுகர்வோரை கூவிக்கூவி அழைத்து, பொருட்களை விற்பனை செய்வது போன்றது. 

    மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு  ஒரு நிறுவனத்துக்கு வர்த்தகர் மத்தியில், தனித்துவத்தை பெற்றுத்தரும். ஆர்டர்களை தேடி வரச்செய்யும்.சிறிய மதிப்பு கூட்டுதல்கள் கூட அதிகளவு வர்த்தக வாய்ப்பு, கூடுதல் விலை என மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் அனைவரும் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் விரைந்து களமிறங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×