search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழி அருள்
    X
    கோழி அருள்

    டேங்கர் லாரியை வெடிக்க செய்து 500 பேரை கொல்வேன்- மிரட்டல் ஆடியோ வெளியிட்ட ரவுடி கைது

    கோழி அருளை பிடிக்க நெல்லையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தென்காசி அருகே உள்ள பங்களாசுரண்டையை சேர்ந்தவர் கோழி அருள். பிரபல ரவுடியான இவர் மீது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சென்னையிலும் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கண்ணன் என்ற கான்டிராக்டர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோழி அருள் பரபரப்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்ததுடன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.

    ‘‘கோழி அருளுக்கு ஒரே போர்ஸ்தான். உங்களுக்கு ஸ்டிரைக்கிங் போர்ஸ் வரும். எனக்கு ஒரே போர்ஸ்தான். அதற்கான ஆயுதம் கேஸ் டேங்கர் லாரி. எங்கே எதை கொளுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். டேங்கர் லாரியோடு 500 பேரை கொன்றுவிட்டுதான் சாவேன்’’ என்று கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் டி.ஜி.பி.க்கு சவால் விடும் வகையிலும் இவர் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    விசாரணை

    இதையடுத்து கோழி அருளை பிடிக்க நெல்லையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கோழி அருள் அம்பத்தூர் எஸ்டேட் அத்திப்பட்டில் தனது சித்தப்பா மகன் தினகரன் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார், கோழி அருளை சுற்றி வளைத்தனர்.

    அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் ராஜூ பிரின்ஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் துப்பாக்கி முனையில் கோழி அருளை கைது செய்தனர்.

    பின்னர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இணை கமிஷனர் ராஜேஸ்வரி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விசாரணையில் கோழி அருள் பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

    கோழி அருள் மீது 23 வழக்குகள் உள்ளன. நெல்லை பெருமாள்புரத்தில் 1995-ம் ஆண்டு அடுத்தடுத்து 2 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கு கொலை முயற்சி வழக்காகும், இன்னொன்று அடிதடி வழக்கு ஆகும்.
    இதன் பின்னர் 1996-ம் ஆண்டு பெருமாள்புரத்தில் கொலை வழக்கு ஒன்றிலும், கொலை முயற்சி வழக்கு ஒன்றிலும் கோழி அருள் கைதாகி உள்ளார்.

    1997-ம் ஆண்டு திருவான்மியூரில் கொலை வழக்கு ஒன்றும் பதிவாகி உள்ளது. விருகம்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கும், எழும்பூரில் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்திலும் கோழி அருள் மீது கொலை வழக்கு உள்ளது.

    சுரண்டை, தூத்துக்குடி, கரூர், தாடிக்கொம்பு, பாவூர்சத்திரம் காவல் நிலையங்களிலும் அவர் மீது  வழக்குகள் உள்ளன. பாவூர்சத்திரத்தில் 2014-ம் ஆண்டு கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி வழக்கில் கைதாகி உள்ளார். தாடி கொம்பு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்படி கோழி அருள் மீது 10 கொலை வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்பத்தூர் போலீசார் கோழி அருளை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை தனிப்படை போலீசார் அவரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேட்டில் கோழி அருளின் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெளி மாவட்ட ரவுடிகள், சென்னையில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ரவுடி ஒழிப்பு பிரிவு போலீசாரும் தலைமறைவு ரவுடிகளை கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×