search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப கோரி தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார்.

    மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளர் இளவேனில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடவேண்டும். கொரோனா தொற்று பாதிப்பால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மேலும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சேவைத்துறைகளை பலப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் உள்ளிட்ட பயன்களை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×