search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ஜி.பி. சைலேந்திர பாபு
    X
    டி.ஜி.பி. சைலேந்திர பாபு

    போலீஸ் துறையில் பெறப்பட்ட 938 மனுக்களுக்கு தீர்வு- டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

    ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின்கீழ் போலீஸ்துறையில் பெறப்பட்ட பொதுமக்களின் 938 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,594 மனுக்கள் காவல்துறையால் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 244 மனுக்கள் நீதிமன்றம் மற்றும் வேறு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காரணத்தினால் புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து மனுக்கள் மீது விசாரணை முடிக்கப்பட்டது.

    மீதம் உள்ள 1,350 மனுக்களில், கடந்த 14-ந்தேதி வரை 938 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட மனுக்களில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக 291 மனுக்களும், சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும், சட்ட விரோத நடவடிக்கையை கட்டுப்படுத்தக்கோரி 70 மனுக்களும், காவல் நிலைய சேவைகள் வேண்டி 51 மனுக்களும், குடும்பத் தகராறு தொடர்பாக 58 மனுக்களும், இதர காரணங்களுக்காக 190 மனுக்களும் அடங்கும்.

    நிலுவையில் உள்ள 412 மனுக்கள் மீது விசாரணை நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட்டு இன்னும் சில நாட்களுக்குள் தீர்வு கண்டு முடித்து வைக்கப்படும்.
    Next Story
    ×