search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சென்னையை குளிர வைத்த மழை- மாலை, இரவு நேரங்களில் பெய்வதால் மகிழ்ச்சி

    புறநகர் பகுதியிலும் மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.

    மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    பகலில் வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நேற்று மாலையில் பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இரவு நேரத்தில் விட்டுவிட்டு பெய்தது. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்களும் சரிந்து விழுந்தன.

    இரவு நேரத்தில் நகரின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உள்ளது. ஒரு சில நேரங்களில் கனமழையும், சில நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழை சென்னை நகரை குளிர வைத்துள்ளது. கோடை காலத்தில் மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இதனால் ஆழ்துளை கிணறு, ஏரி, குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. புறநகர் பகுதியிலும் மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது.

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் மழை பெய்து வருகிறது. புழல், செங்குன்றம், பொன்னேரி, சோழவரம், பூந்தமல்லி, திருநின்றவூர், ஆவடி மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வருகிற 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×