search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திலி கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்த காட்சி
    X
    இந்திலி கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்த காட்சி

    நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு விரைவாக எடுத்து செல்ல வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

    விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு விரைவாக எடுத்து செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திலி, நாகலூர், அம்மகளத்தூர், நயினார்பாளையம், தேவபாண்டலம், திருநாவலூர், ஏ.குமாரமங்களம், பாதரம்பள்ளம், சிறுநாவலூர் மற்றும் பகண்டை கூட்ரோடு ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்காக கள்ளக்குறிச்சி வட்டத்துக்குட்பட்ட இந்திலி கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

    அப்போது விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்குக்கு விரைவாக எடுத்து செல்லவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட ஏ.குமாரமங்களம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த கலெக்டர் நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடு குறித்து விவசாயிகளின் கருத்தை கேட்டறிந்தார்.

    மேலும் தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், பருவ மழை காலம் நெருங்கி வருவதாலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்கவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு விரைவாக எடுத்துச்செல்ல கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2020-2021-ம் ஆண்டில் இதுவரை சுமார் 3,112 விவசாயிகளிடமிருந்து 16 ஆயிரத்து 358 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல துணை மேலாளர் உமாதேவி, நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×