search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தி.மு.க.வினர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என பிதற்றுகிறார்கள் -எடப்பாடி பழனிசாமி பதிலடி

    முன்பு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தபோது திமுகவினர் எதைத் தாங்கிக் கொண்டிருந்தனர் என திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நொடி ஆகாது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    சென்னை:

    நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

    நீதிமன்றத்தின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். இது தொடர்பாக முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். 

    அந்த அறிக்கையில், “ஆட்சியை இழந்த பின்னும் பாஜகவின் பாதம் தாங்கி அடிமை சேவகம் செய்யும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நாங்கள் போடுகிறோம்; நீங்கள் அதைக் குப்பையில் போடுங்கள் என்று பாஜகவுடன் திரைமறைவு ஒப்பந்த நாடகம் நடத்தி சட்டமன்றத்தை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி” என கூறியிருந்தார்.

    மு.க.ஸ்டாலின்

    மேலும், பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவாக மனுத் தாக்கல் செய்திருப்பதை கண்டிக்க தைரியமில்லாதவர் பழனிசாமி; நீட் தேர்வுக்கு எதிராக இருப்பதாக அவர் சொல்லிக்கொள்வதைப் போல கபட நாடகம் வேறு இருக்க முடியுமா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    முதல்வரின் இந்த விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

    “எங்களை பாதம் தாங்கிகள், பாஜகவின் அடிமைகள் என்றெல்லாம் விமர்சித்துள்ளார் ஸ்டாலின். முன்பு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தபோது திமுகவினர் எதைத் தாங்கிக் கொண்டிருந்தனர் என திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நொடி ஆகாது” என்று காட்டமாக பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல திமுகவினர் பிதற்றிக்கொள்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
    Next Story
    ×