search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது ஏகே ராஜன் குழு
    X
    நீட் தேர்வு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது ஏகே ராஜன் குழு

    நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பா?- முதலமைச்சரிடம் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல்

    நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 86 ஆயிரத்து 342 மனுக்கள் நேரடியாக பெறப்பட்டது. ஆன்லைன் மூலமாகவும் பலர் கருத்துகளை தெரிவித்தனர்.
    சென்னை:

    மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க. அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

    இதைத்தொடர்ந்து நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    கடந்த மாதம் 10-ந்தேதி அமைக்கப்பட்ட இந்த குழு நீட் தேர்வின் பாதிப்புகள் தொடர்பாக ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான உத்தரவை முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    பிறப்பித்து இருந்தார்.

    இதையடுத்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலாளர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறைச் செயலாளர் கோபிநாத், டாக்டர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவ கல்வி துறை இயக்குனர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நீட் தேர்வு

    நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 86 ஆயிரத்து 342 மனுக்கள் நேரடியாக பெறப்பட்டது. ஆன்லைன் மூலமாகவும் பலர் கருத்துகளை தெரிவித்தனர்.

    அந்த மனுக்களையும், மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன், பின் சேர்ந்த மாணவர்களின் விபரங்கள் உள்ளிட்டவைகளையும் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

    இது தொடர்பாக 4 முறை ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்குக்கு எதிராக
    தமிழக அரசு
    சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, தமிழக அரசு அறிவித்த நீட் ஆய்வு குழுவில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தது. இதனை வரவேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார்.

    ஐகோர்ட்டில் நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

    அப்போது நீட் ஆய்வு அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் தாக்கல் செய்தனர்.

    நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பாக இந்த குழுவினர் 86 ஆயிரத்து 342 பேரிடம் கருத்துக்களை கேட்டு அதனை ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

    மத்திய அரசு செப்டம்பர் 12-ந்தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×