search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அம்மன் கழுத்தில் கிடந்த நகை கொள்ளை- கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றிரவு பூஜைகள் முடிந்து பூசாரி கோவில் நடைகளை சாத்திவிட்டு சென்றார். இன்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்தார். 

    அப்போது கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அம்மன் கழுத்தில் கிடந்த நகைகளும் திருடப்பட்டிருந்தது. இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல்பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    கொள்ளையர்கள் 3 அம்மன் சிலைகளின் கழுத்தில் கிடந்த 101/2 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் கோவிலுக்குள் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் ஒன்றையும் கொள்ளையர்கள் உடைக்க முயன்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் தப்பியது.

    சம்பவ இடத்துக்கு மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. கோவிலில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது நள்ளிரவு 2 மணியளவில் கொள்ளையர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வருவது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவில் பூட்டை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் நகைகள் தப்பியது.

    4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் அதே கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    Next Story
    ×