search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    பா.ஜ.க.வின் பிரிவினைவாத போக்கு தமிழ்நாட்டில் எடுபடாது - கேஎஸ் அழகிரி

    எனக்கும்தான் சிதம்பரத்தை தலைநகரமாக மாற்றி, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    சென்னை: 

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பா.ரா என்று அழைக்கப்படும் பா.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். எம்.எஸ்.திரவியம், எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன் உள்பட மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர் உள்பட நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் பா.ராமச்சந்திரன் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா வரவேற்று பேசினார். விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பா.ராமச்சந்திரன் உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியின் போது கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தை பிரிப்பது ஒரு காலமும் முடியாத காரியம். தமிழக மக்கள் ஒற்றுமையை விரும்புபவர்கள். எனவே பிரிவினைவாதிகளை ஆதரிக்க மாட்டார்கள். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’, ‘தனிமரம் தோப்பு ஆகாது’ ஆகிய பழமொழிகளை பேசுபவர்கள் தமிழர்கள்.

    தமிழகத்தை பிரிக்கும் முயற்சி வெற்றி பெறாது. பா.ஜ.க.வின் பிரிவினைவாத போக்கை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. அதே போன்று திருச்சி, கோவை, மதுரையை 2-வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலம் இருக்கிறது. இதற்கு மிகுந்த பொருட்செலவு ஏற்படும். தமிழ்நாடு அரசிடம் போதிய நிதி வருவாய் இல்லை. எனவே 2-வது தலைநகரம் அமைப்பதற்கு சாத்தியம் இல்லை.

    எனக்கும்தான் சிதம்பரத்தை தலைநகரமாக மாற்றி, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்தாக இருக்க முடியும். பா.ஜ.க.வின் பிரிவினைவாத போக்கு தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. இவ்வாறு அவர் பேசினார்.

    கோப்புபடம்

    முன்னதாக மக்கள் பாதுகாப்பு பேரவையின் மாநில தலைவர் தங்க சாந்தகுமார் தனது ஆதரவாளர்களுடன் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
    Next Story
    ×