search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொசு
    X
    கொசு

    கேரளாவில் சிகா வைரஸ் பரவல்- புளியரையில் தீவிர கண்காணிப்பு

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
    தென்காசி:

    கேரள மாநிலத்தில் கொரோனா நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அங்கு சிகா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள மாநில அரசு விதித்துள்ளது. முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையிலும் நோய் தொற்று குறையாத சூழல் உள்ளது.

    பிற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும்போது முக்கிய காரணங்களுக்காக மட்டும் இ-பாஸ் மூலம் அனுமதிக்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது கொரோனா இல்லை என்ற சான்று கொடுத்தால்தான் இந்த மாநில சோதனைச் சாவடிகளில் அனுமதிக்கிறார்கள். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு செல்பவர்கள் ஒரே நாளில் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையான புளியரை பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து புளியரையில் சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சோதனை சாவடியில் ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது சிகா வைரஸ் பரவலை தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    மேலும் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தங்குமிடத்தில் கண்காணிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களது பகுதியில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தால் அதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04633-290548 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.


    Next Story
    ×