search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் நிலையம் வந்திறங்கிய தொழிலாளர்கள் பழைய பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் காட்சி.
    X
    ரெயில் நிலையம் வந்திறங்கிய தொழிலாளர்கள் பழைய பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் காட்சி.

    கொரோனாவை மறந்து திருப்பூரில் சாலைகளில் சுற்றும் பொதுமக்கள்

    தொடர் கட்டுப்பாடுகளால் தற்போது தொற்று கட்டுப்பாட்டுபகுதி மாநகராட்சிக்குள் இல்லை என்ற நிலை வந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் இருந்த 319 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது மருத்துவமனைகளில் மொத்தம் 1,656 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

    மாவட்ட அளவில் இதுவரை மொத்தம் 84,975 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 82,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 8 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 792 ஆக உள்ளது.

    மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதி எண்ணிக்கை மே மாதம் 67 ஆக இருந்தது. தொடர் கட்டுப்பாடுகளால் தற்போது தொற்று கட்டுப்பாட்டு பகுதி மாநகராட்சிக்குள் இல்லை என்ற நிலை வந்துள்ளது.

    அதேநேரம் மக்கள் எங்கு சென்றாலும் முக கவசம் அணிய வேண்டும். தனிநபர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனிடையே தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை கச்சேரி வீதி நகராட்சி பள்ளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 120 கோவிஷீல்டு, 50 கோவாக்சின் என 170 டோஸ் தடுப்பூசிகள் வரவழைக்கபட்டிருந்தன.

    தகுதியானவர்கள் முகாமில் பங்கேற்கவும் நகராட்சியால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சிலர் முதல் டோஸ் செலுத்த இருப்பதாக கருதி முண்டியடித்துக்கொண்டு முன்னேற முற்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது டோஸ் மட்டுமே செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் திரும்பிச்சென்றனர்.

    இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், தடுப்பூசி செலுத்த வந்த அனைவரையும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை  பின்பற்றி நிற்கவும் ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்தப்படாத நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசி தருவிக்கப்பட்டதால் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர் என்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனாவை மறந்து சகஜமாக கடைகளுக்கு செல்வதுடன்,  வீதிகளிலும் சுற்றி திரிகின்றனர். முககவசம் அணிந்திருந்தாலும் அதனைமுழுமையாக அணியாமல் செல்கின்றனர். இது தொற்று பரவலுக்கு வழிவகுத்து விடும் என்று சுகாதாரத்துறைஅதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

    எனவே கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசத்தை முழுமையாக அணிந்திருந்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×