search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் மெயினருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதை படத்தில் காணலாம்
    X
    குற்றாலம் மெயினருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதை படத்தில் காணலாம்

    குற்றாலத்தில் சாரல் மழை - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுமா?

    கடந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் களைகட்டினாலும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    தென்காசி:

    உலக பிரசித்தி பெற்ற தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் களைகட்டும்.

    இந்த ஆண்டு வழக்கம் போல கடந்த மாதம் சீசன் தொடங்கியது. ஜூன் மாத இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆனால் இந்த மாதம் தொடக்கம் முதலே தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் அடித்து வருகிறது. அவ்வப்போது மாலை நேரங்களில் மட்டும் குளிர்ந்த காற்றுடன் குறிப்பிட்ட சில இடங்களில் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் குற்றாலத்தின் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து குறைந்தே காணப்பட்டது.

    இந்நிலையில் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதே போல மேலகரம், செங்கோட்டை, கட்டளைகுடியிருப்பு, தவணை, வல்லம், பிரானூர் பார்டர், குண்டாறு அணைப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

    தென்காசி, நெல்லை மாவட்டத்தில் தற்போது கார் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு மழையை எதிர்பார்த்த நிலையில் இன்று சாரல் தொடங்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சீசன் காலத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டிய நிலையில் இன்றைய சாரலால் பொது மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இன்று காலை மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை நீடித்தால் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரிக்கும்.

    கடந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் களைகட்டினாலும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் ஊரடங்கு தளர்வு காரணமாக டிசம்பம் மாதம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் சீசனை நம்பிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்தாண்டு 2-வது அலை காரணமாக குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சீசன் முடிய இன்றும் 50 நாட்களே உள்ள நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என சீசன் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் குற்றாலம் அருவிக்கரை பகுதியில் ஆய்வு செய்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறும் போது, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழி காட்டுதல்களை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    எனவே அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிக்கும் போது குற்றாலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டது போல கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, குறிப்பிட்ட நேரத்தில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்பாக உள்ளது. 

    Next Story
    ×