search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நீலகிரி, கோவை, கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    நீலகிரி, கோவை, தேனியில் பலத்த காற்றுடன் மழை இருக்கும் என்பதால், இங்குள்ள மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும். பொதுமக்கள் இந்த பகுதிகளில் மலை ஏற்றத்தை தவிர்க்க வேண்டும்.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சில இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால், 10-ந் தேதி (நாளை மறுதினம்), 11-ந் தேதி் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    எனவே இந்த நாட்களில் நீலகிரி, கோவை, தேனியில் பலத்த காற்றுடன் மழை இருக்கும் என்பதால், இங்குள்ள மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும். பொதுமக்கள் இந்த பகுதிகளில் மலை ஏற்றத்தை தவிர்க்க வேண்டும்.

    மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடலை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வத்திராயிருப்பு 11 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர் 9 செ.மீ., மாரண்டஹள்ளி 7 செ.மீ., வால்பாறை 6 செ.மீ., வேடசந்தூர் 5 செ.மீ., மருங்காபுரி, பொன்னமராவதி, வீரபாண்டி, கள்ளந்திரி தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
    Next Story
    ×