search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவனிடம் புதுவை போலீசார் விசாரணை

    எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். கொள்ளையர்கள் மகாராஷ்டிராவில் இருந்து தங்களது கொள்ளை சம்பவத்தை தொடங்கி உள்ளனர். இதுவரை பல மாநிலங்களில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.
    சென்னை:

    தமிழகத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து அரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் கொண்ட கொள்ளையர்கள் சென்னையிலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கொள்ளை அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுவையில் கிருமாம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் உள்ள பணம் செலுத்தும் எந்திரத்தில் அரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். ஆனால் அந்த கொள்ளையர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

    அவர்களை அடையாளம் காணும் பணியில் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையில் எஸ்.பி.ஐ. கொள்ளை வழக்கில் கைதான கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பெரியமேடு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் சவுகத் அலியும், அவனது கூட்டாளியான நஜீம் உசேனும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக பெரியமேடு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து புதுவை போலீசார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் நேற்று சென்னை வந்தனர். பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    புதுவை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படங்களை முக்கிய ஆதாரங்களாக போலீசார் திரட்டி வைத்திருந்தனர். அதனை காட்டி கொள்ளையனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    புதுவை போலீசார் நடத்திய விசாரணையின்போது புகைப்படங்களில் இருப்பது தனக்கு யார் என்று தெரியாது என்று சவுகத் அலி கூறியுள்ளான்.

    இதையடுத்து புதுவை போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, குற்றவாளியின் புகைப்படத்தை பார்த்து சவுகத் அலி அடையாளம் காட்டவில்லை என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து தங்கள் மாநிலத்தில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்குவதற்கு விரைவில் அரியானா செல்ல இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

    எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். கொள்ளையர்கள் மகாராஷ்டிராவில் இருந்து தங்களது கொள்ளை சம்பவத்தை தொடங்கி உள்ளனர்.

    இதுவரை பல மாநிலங்களில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள். ஆனால் எங்கும் சிக்கவில்லை. தமிழக போலீசார் தான் அவர்களை மடக்கி பிடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×