search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நிபந்தனையற்ற கடன்,தவணை காலம் அதிகரிப்பு-திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

    ஏற்கனவே சீனா, வங்கதேசம், வியட்நாம், இலங்கை என பல்வேறு நாடுகளுடன் தொழில் போட்டி உள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா தாக்கம் திருப்பூர் தொழில்துறையினரை தற்போது திக்குமுக்காட செய்கிறது. பின்னலாடை துறையில் நெருக்கடி சற்று கூடுதல்தான்.கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பிய ஆயத்த ஆடைகளுக்கு தொகை இழுத்தடிப்பு, அக்சசரீஸ் விலை, தொழிலாளர் சம்பளம், அடிப்படை செலவுகள் என பல்வேறு வகையில் பல சிரமங்களை உற்பத்தியாளர்கள் சந்தித்து வந்தாலும் அடுத்தடுத்த ஆர்டர்களை கொண்டு சமாளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    ஏற்கனவே சீனா, வங்கதேசம், வியட்நாம், இலங்கை என பல்வேறு நாடுகளுடன் தொழில் போட்டி உள்ளது. இருப்பினும் சமாளித்து வருகிறோம். கட்டுக்கடங்காத நூல் விலை எங்களை கட்டிப்போட்டது. ஒரு வழியாக மீண்டோம். அதன்பின் 2020ல் கொரோனா வந்ததில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.ஏறத்தாழ 45 நாட்களுக்கு பின் மீண்டும் உற்பத்தியை துவங்கியதில் சற்றே மூச்சுவிட்டோம். அதற்குள், இரண்டாவது அலை எங்களை புரட்டி போட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் வங்கியில் கடன் வாங்கியது, பிற இடத்தில் வாங்கியது, மூலப்பொருட்கள் வாங்கியதில், ஜாப் ஒர்க் செட்டில்மென்ட் என பல வகையில் பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது.அதிலும் சில நிறுவனங்கள் வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. அதனால் வாடகையும் ஒரு சுமைதான். இந்த வட்டிக்கும், வாடகைக்கும் விடுமுறையே இல்லை. எப்படி பார்த்தாலும் இவ்விரண்டும் கழுத்தை நெரிக்கின்றன. 

    தொழிலில் ஓரிரு நெருக்கடி வந்தால் சமாளிக்கலாம். ஒட்டு மொத்தமாக பல விஷயங்கள் வரிசை கட்டி நெருக்கினால் சிரமம்தானே. இப்போது ஊரடங்கு தளர்வில் நிறுவனங்களை இயக்கி வருகிறோம். ஆனால் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. ஆர்டரை முடிக்க வேண்டும். சங்கிலி தொடர் போல உள்ள ஜாப் நிறுவனங்களுக்கும் பணம் கொடுத்தாக வேண்டும். பெரிய நிறுவன உரிமையாளர்கள் எப்படியோ தப்பித்துவிடுவர். அவர்களில் கூட சிலருக்கும் கையிருப்பு கரைந்து விட்டதால் அவர்களும் நெருக்கடியில் தான் உள்ளனர். இப்படி பெரிய, நடுத்தர, சிறு, குறு என அனைத்து வகை நிறுவனங்களையும் கொரோனா ‘கொத்தி’ போட்டுள்ளது. இதுவும் கடந்து போகும் என்று நினைத்தால் கூட அதுவரை எத்தனை ‘வலி’களை தாங்க வேண்டுமோ என நினைத்தால் வேதனை தான். இதற்கெல்லாம் ஒட்டு மொத்த தீர்வு என்பது வங்கிகளின் கையில் தான் உள்ளது. நிபந்தனையற்ற கடன், தவணை காலம் அதிகரிப்பு போன்றவை மட்டுமே, திருப்பூர் தொழில் துறையினரின் வயிற்றில் பால் வார்ப்பதாக அமையும் என்றனர்.
    Next Story
    ×