search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
    X
    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போலீஸ் காவலில் விசாரணை

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 2 செல்போன்கள் பயன்படுத்தி உள்ளார். ஆனால் சாதாரண செல்போன் மட்டுமே போலீஸ் கையில் சிக்கியுள்ளது.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்தார்.

    திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி நெருக்கமாக பழகி சென்னை பெசன்ட் நகரில் தனி வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் அந்த புகாரில் கூறி இருந்தார்.

    அவரது புகாரின் பேரில் அடையார் மகளிர் போலீசார் மணிகண்டன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவான மணிகண்டனை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் தேடி சென்றனர். பின்னர் கடந்த மாதம் 20-ந்தேதி அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை ஜெயிலிலேயே அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    மணிகண்டனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கும்படி போலீஸ் தரப்பில் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து மணிகண்டன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவில், ‘தன் மீது கூறப்பட்ட புகாரில் எந்த உண்மையும் இல்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. புகார் கொடுத்துள்ள சாந்தினி நன்கு படித்தவர். எல்லாம் தெரிந்தவர். நான் திருமணம் ஆனவன் என்பதும் அவருக்கு தெரியும். அவருக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு பொய் புகார் கொடுத்துள்ளார்’ என்று கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பிலும் மணிகண்டனை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த அனுமதி கேட்டு மனு செய்து இருந்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டு பிறப்பித்து இருந்த உத்தரவை ரத்து செய்து இன்றும், நாளையும் போலீஸ் காவலுக்கு அனுமதித்தனர்.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் இன்று விசாரணைக்காக அழைத்து சென்றனர். சென்னையில் இருந்து அவரை மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறார்கள். மணிகண்டன் 2 செல்போன்கள் பயன்படுத்தி உள்ளார். ஆனால் சாதாரண செல்போன் மட்டுமே போலீஸ் கையில் சிக்கியுள்ளது.

    அவரது ஸ்மார்ட் போன் இதுவரை கிடைக்கவில்லை. மணிகண்டனும், நடிகை சாந்தினியும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை சாந்தினி வெளியிட்டார். மேலும் இதேபோல் பல படங்கள் அவரது செல்போனில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே அந்த செல்போன் எங்கே? என்று போலீசார் மணிகண்டனிடம் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×