search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிகரிக்கும் வடமாநில தொழிலாளர்கள் வருகை: கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

    ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்கள், முடிவுகள் வரும் வரை நிறுவனம் அல்லது வீடுகளில் 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் ஏராளமான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வடமாநிலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலங்களான உத்தர பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன். தொற்று பயத்தாலும், வேலை இல்லாததாலும் வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தற்போது தொற்று பாதிப்பு குறைந்து, மாவட்டத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து நிறுவனங்களும் இயங்க தொடங்கின.

    தொழிற்சாலைகள் இயங்கிய தகவல் அறிந்ததும், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநிலத்தவர்கள் மீண்டும் ரெயிலில் கோவைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.

    ரெயில்களில் கூட்டம் அதிகரித்தை தொடர்ந்து கோவை ரெயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயிலில் வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தற்போது வடமாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வர தொடங்கியுள்ளனர். தொற்றை தொடக்கத்திலேயே கண்டறியும் நோக்கில் ரெயிலில் வரும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு சுகாதாரத்துறையுடன் இணைந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கோவையில் நேற்று மட்டும் 500 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

    ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்கள், முடிவுகள் வரும் வரை நிறுவனம் அல்லது வீடுகளில் 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    Next Story
    ×