search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பள்ளிகள் திறப்பை எதிர்பார்க்கும் மாணவர்கள்-ஆசிரியர்கள்

    அனைத்தையும் தாண்டி புது கல்வியாண்டுக்கான (2021-22) மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    கடந்த 1 1/2 ஆண்டாக பள்ளிகள் இயங்காததால் குழந்தைகளை மட்டுமல்ல. ஆசிரியர்களையும் எப்பதான் ஸ்கூல் திறப்பாங்களோ என புலம்ப வைத்துவிட்டது. கல்வி தொலைக்காட்சி வழியே கற்பித்தல் நடைபெறுவதாக கூறப்பட்டாலும் மாணவர் கற்றலை உறுதி செய்ய வகுப்பறை போல் எந்த அளவுகோலும் இல்லை என்பதே உண்மை.வீட்டில் போதுமான வசதிகள் உள்ள படித்த பெற்றோர்களை கொண்ட மாணவர்களை தவிர்த்து, அரசு பள்ளி மாணவர்கள் பலர் கற்பதற்கான வாய்ப்புகளை பெரிதும் இழந்தே கடந்த ஆண்டை கடந்துள்ளனர். 2020-21ம் கல்வியாண்டையே விழுங்கிவிட்டது கொரோனா. 

    அனைத்தையும் தாண்டி, புது கல்வியாண்டுக்கான (2021-22) மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இம்முறையாவது வகுப்பறையை காண்போம் என்ற நம்பிக்கையுடன் பள்ளிகள் தோறும் கல்வி சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், பெல் சத்தம், ‘டீச்சர்’ என அழைக்கும் குட்டீஸ் குரல், ஆசிரியரில்லா வகுப்பறைக்குள் கேட்கும் கூச்சல் சத்தம், உள்ளே நுழைந்ததும் வரும் பேரமைதி, கரும்பலகை, சாக்பீஸ் வாசம் என ஓராண்டாக வகுப்பறை கல்வியை இழந்து விட்டோம். ‘சைலண்ட்’ என அதட்ட முடியாமல் ஏங்கி போயுள்ளோம். மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியது புத்துயிர் அளிக்கிறது. 

    பள்ளிகளுக்கு வந்து பெற்றோர் புத்தகங்களை பெற்று செல்வது நம்பிக்கையாக உள்ளது. ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை அமர வைப்பதே சவால்தான். ‘எப்படா லீவு விடுவாங்க’னு இருந்த மாணவர்கள் கூட, ‘எப்ப சார் ஸ்கூல் திறப்பாங்க’னு கேட்கும் அளவுக்கு வீட்டிலே இருப்பதை விரும்புவதில்லை. இந்தசூழல் விரைவில் மாற வேண்டும். பள்ளிகள் திறக்கப்படாததால் நல்லா படிக்கும் மாணவர்கள் கூட ரொம்ப பின்தங்கிவிடுவாங்களோ என்ற பயம் வந்துவிட்டது. பள்ளி திறந்தால்தான் நல்லது. இதை உணர்ந்து பெற்றோர்கள் ஆர்வமாக அட்மிஷனுக்கு வராங்க. பள்ளிகள் திறந்தால்தான் மாணவர்-ஆசிரியர் இடையே கலந்துரையாடல் இருக்கும். பிணைப்பு வரும். கற்றல் அங்கே எளிமையாக இருக்கும். மீண்டும் வகுப்பறைகள் திறந்தாலும் ஆசிரியர்களுக்கும் சவால் அதிகம் என்றனர்.
    Next Story
    ×