search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவ-மாணவிகள்
    X
    மாணவ-மாணவிகள்

    பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு முறை: மாணவ-மாணவிகள் சொல்வது என்ன?

    நாங்கள் தேர்வு எழுதி இருந்தால் அதிக மதிப்பெண் கிடைத்து இருக்கும். ஆனால் இந்த கணக்கீடு முறையின் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு உள்பட இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேர்வு ரத்து ஆனதால் தேர்வு எழுதாத பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து மாணவ-மாணவிகள், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    அர்ச்சனா

    நான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தேன். கொரோனா பாதிப்பால் தேர்வுகள் அனைத்தும் ரத்து ஆகி விட்ட நிலையில் உயர்கல்வி கற்பதற்கு பிளஸ்-2 மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவார்களோ என்ற கவலையில் இருந்து வந்தேன். இந்நிலையில் தமிழக அரசு மதிப்பெண்களை வழங்க தற்போது கணக்கீட்டு முறையை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்களையும், பிளஸ்-2 செய்முறை தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இது எங்களைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதகமான அறிவிப்பாகும். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    லட்சுமி

    நான் பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கீடு குறித்து அரசு அறிவித்த அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற ஸ்ரீராம் கூறுகையில், நான் தேர்வுக்கு நன்றாக படித்து தயார் நிலையில் இருந்தேன். தேர்வு எழுதி இருந்தால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து இருக்கும். தேர்வு நடக்காததால் போதிய மதிப்பெண் இன்றி விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்யமுடியாத சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதனால் பல மாணவர்களின் எதிர்கால கனவுகள் கேள்விக்குறியாகி உள்ளது.

    மாணவர் சரவணகுமார் கூறுகையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் தேர்ச்சி என்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது ஆகும். எண்ணற்ற மாணவர்கள் இந்த மதிப்பெண் கணக்கீடு முறையினால் பயன்பெறுவர்.

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவன் லோகநவினாஷ் கூறியதாவது:-

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதம் எடுக்கப்படுகிறது. இதனை 30 சதவீதமாக மாற்றிருந்தால் நன்றாக இருக்கும். 12-ம் வகுப்பில் நன்றாக படித்தேன். ஆதலால் கடினப்பட்டு படித்தும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என வருந்துகிறேன்.

    ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா கூறுகையில், நாங்கள் தேர்வு எழுதி இருந்தால் அதிக மதிப்பெண் கிடைத்து இருக்கும். ஆனால் இந்த கணக்கீடு முறையின் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது. ஆகையால் இது போன்ற கணக்கீடு நன்றாக படிக்கும் மாணவிக்கு திருப்தி அளிக்காது.

    கணஞ்சாம்பட்டி சேர்ந்த மாணவி சினேகா தேவி கூறியதாவது:-

    தமிழக அரசு 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் நான் முதல் திருப்புதல் தேர்வு, 2-ம் திருப்புதல் தேர்வு என படிப்படியாக எழுதி அதிக மதிப்பெண் பெற்றிருப்பேன். அதேபோல பாடவாரியாகவும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என நினைத்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தமிழக அரசின் முடிவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்.
    Next Story
    ×