search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வடவள்ளியில் ஆராய்ச்சியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-டாலர்கள் கொள்ளை

    கடந்த ஒரு மாதமாக கல்வீரம்பாளையத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி கல்வீரம்பாளையம் முருகன் நகரைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 31). இவர் சீனாவில் ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இங்கு வந்து குடும்பத்துடன் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கணுவாய் பகுதியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 1½ பவுன் தங்க நகைகள், பணம் 25 ஆயிரம், மற்றும் வெளி நாட்டு பணங்களாக சிங்கப்பூர் டாலர்கள் , சீனா யுவாக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மகாராஜன் வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இதே பகுதியில் டாக்டர் வீட்டில் கொள்ளை போயிருந்தது. கடந்த ஒரு மாதமாக கல்வீரம்பாளையத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    மக்கள் வீட்டை பூட்டிவிட்டு செல்லும் போது போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து செல்வதில் சிரமம் உள்ளது. எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×