search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேடியோ காலர் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அரசு கால்நடை டாக்டர் சுகுமார் விளக்கம் அளித்துள்ள காட்சி
    X
    ரேடியோ காலர் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அரசு கால்நடை டாக்டர் சுகுமார் விளக்கம் அளித்துள்ள காட்சி

    மேட்டுப்பாளையத்தில் சுற்றி திரிந்த பாகுபலி யானை இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

    கடந்த 2 நாட்களாக வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சுற்றிதிரியும் பாகுபலி காட்டு யானை அவ்வப்போது வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. அவ்வாறு புகும் அந்த யானையால் மக்களுக்கு எந்தவித உயிர் பாதிப்பும் இல்லை என்றாலும், பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. எனவே யானையின் நடமாடத்தை கண்காணிக்கவும், பயிர்கள் சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவது என வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    ரேடியோ காலர் பொருத்துவதற்கு வசதியாக டாப்சிலிப் யானைகள் முகாமில் கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். ஆனால் பாகுபலி யானை எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே வனவர் தலைமையில் ஒரு குழுவுக்கு 6 பேர் வீதம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மேட்டுப்பாளையம் வனப்பகுதி முழுவதும் பாகுபலி யானையை சல்லடை போட்டு தேடினர்.

    நேற்று இரவு முழுவதும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் பாகுபலி காட்டு யானை நடமாட்டம் குறித்து வனச்சரக அலுவலர்கள் பழனிராஜா, செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு செலுத்தி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வேடர் காலனி அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்பட்ட ஓடந்துறை வனப்பகுதியில் பாகுபலி காட்டு யானை இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வனப்பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் வேடர் காலனிக்கு விரைந்து சென்றனர். வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியே வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பாகுபலி யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் ஓய்வு பெற்ற கால்நடை துறை கூடுதல் இயக்குனர் மனோகரன் வன கால்நடை மருத்துவ அலுவலர்கள் அசோகன், ராஜேஷ்குமார், பிரகாஷ் ஆகியோர் பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக வனப்பகுதிக்கு விரைந்தனர். வனப்பகுதியில் வனத்துறையினர் நடமாட்டத்தை கண்டு கொண்ட பாகுபலி யானை உடனடியாக அங்கிருந்து மெல்ல, மெல்ல நடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் 2 ஆக பிரிந்தனர். ஒரு குழுவினர் யானை சென்ற இடத்தை நோக்கியும், மற்றொரு குழுவினர் யானை வரும் வழியிலும் நின்று பாகுபலி யானையை கண்காணிக்கின்றனர். யானை வெளியில் வந்ததும் உடனடியாக மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்காக வனத்துறையினரும், டாக்டர்களும் தயார் நிலையில் உள்ளனர். 

    Next Story
    ×