search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டெல்டா பிளஸ் பாதிப்பு உள்ளதா?- 75 பேரின் மாதிரிகள் பரிசோதனை

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    இந்தியாவில் கொரோனா 2-ம் அலை ஓய்ந்து வரும் நிலையில், அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.

    டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனாவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.  2-ம் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும் பாலனவர்கள் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    அதைவிட வீரியமிக்க டெல்டா பிளஸ் வைரசாலும் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 51 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.

    இதற்கிடையே டெல்டா பிளஸ் வைரசால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரேனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 25 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக பெங்களூரில் உள்ள மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் முடிவுகள் தெரியவரும். அப்போது தூத்துக்குடியில் யாருக் கேனும் டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளதா என தெரியவரும்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் டெல்டா பிளஸ் வைரசுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதா என மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்ட போது, எங்களுக்கு அது தொடர்பான எந்த அறிவிப்புகளும் வரவில்லை.

    டெல்டா பிளஸ் வைரசுக்கான அறிகுறிகளும் யாருக்கும் இல்லை என தெரிவித்தனர்.

    Next Story
    ×