search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான வங்கதேச வாலிபர்கள்.
    X
    கைதான வங்கதேச வாலிபர்கள்.

    வங்கதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் தயாரித்த கும்பலுக்கு வலைவீச்சு

    3பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஈரோடு,பெருந்துறை, திருப்பூர் போன்ற பகுதிகளில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராக்கியாபாளையம் ரோடு கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவர் தண்ணீர்பந்தல்காலனியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அவரது 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வங்காளதேசத்தை சேர்ந்த சிமுல்காஜி (29) என்பவர் மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார். இதையடுத்து மணிகண்டன், சிமுல் காஜியிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்களை கொடுக்குமாறு கேட்டுள்ளார். 

    அதற்கு மணிகண்டன், தான் வேலை செய்யும் பனியன் நிறுவனத்தில் ஆவணங்களை கொடுத்துள்ளதாகவும், கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதால் திறந்த உடன் அவற்றை வாங்கித்தருகிறேன் என்றும்  கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிமுல் காஜி மணிகண்டன் வீட்டில் குடியேறினார். 

    இந்தநிலையில் அவருடன் வங்கதேசத்தை சேர்ந்த சைபுல் இஸ்லாம் (40) மற்றும் மன்னன் முல்லா (31) ஆகியோரும் அடிக்கடி வந்து தங்கியுள்ளனர். இது மணிகண்டனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
     
    நேற்று முன்தினம் மணிகண்டன் சிமுல் காஜி வீட்டிற்கு சென்று பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தர வேண்டும். இல்லையென்றால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து சிமுல் காஜி அவர் பெயரில் உள்ள இந்திய ஆதார் அட்டையை காட்டினார். அவரிடம் மணிகண்டன், வங்காளநாட்டை சேர்ந்த நீங்கள் எப்படி இந்தியாவில் ஆதார் அட்டையை வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வங்காளதேச நாட்டில் இருந்து வரும் எல்லோருமே இதுபோன்ற போலியான ஆதார் அட்டையைத்தான் வைத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை சிமுல்காஜி,மன்னன் முல்லா, சைபுல் இஸ்லாம் ஆகியோர் சேர்ந்து  தாக்கியுள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த 3 பேரும் உரிய ஆவணங்களின்றி  திருப்பூரில் தங்கி இருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. போலீசார் 3பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த போலி ஆதார் அட்டை,ஏராளமான சிம்கார்டுகள், செல் போன்கள், வங்காளதேச குடியுரிமை சான்றிதழ், போலியான அடையாள அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 3 பேரையும் திருப்பூர் ஜே.எம்.3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 

    3பேரும் இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தனர்? போலி ஆதார் அட்டையை பெற்றது எப்படி? வேலைக்காகத்தான் திருப்பூரில் தங்கியிருந்தனரா? என்று போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தினர்.

    அவர்களது செல்போனில் பதிவாகிய எண்களை ஆய்வு செய்தபோது வங்காளதேச நாட்டினருடன் அடிக்கடி பேசி வந்துள்ளது தெரியவந்தது. இதனால் சதிசெயலில் ஈடுபட திருப்பூரில் தங்கியிருந்தனரா? என்றும்  விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது 3பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஈரோடு,பெருந்துறை, திருப்பூர் போன்ற பகுதிகளில்  தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்துள்ளது தெரியவந்தது.

    மேலும் வங்காள தேசத்தில் இருந்து ஆற்றை கடந்து மேற்கு வங்காளத்திற்குள் நுழைந்த அவர்கள், கொல்கத்தாவை சேர்ந்த கும்பல் தயாரித்து கொடுத்த போலி ஆதார் அட்டையை பெற்றுக்கொண்டு திருப்பூருக்கு வந்துள்ளனர். அந்த கும்பல் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×