search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து அலங்கரிப்பது மட்டுமின்றி, பல்வேறு மக்கள் நல திட்டங்களும் செய்யப்பட உள்ளன.
    சென்னை:

    சென்னையை மீண்டும் சிங்கார சென்னையாக மாற்றும் திட்டம் சிங்கார சென்னை 2.0 திட்டம். அதன்படி சர்வதேச நகரங்களை போன்று சென்னையை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தை 10 ஆண்டுகளில் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்தது. அதில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. வருகிற 30 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இது தொடர்பான முழுமையான அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட உள்ளது.

    முக ஸ்டாலின்

    சிங்கார சென்னை 2.0 திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு திட்டம் ஆகும். 1996-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார். அப்போது சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது.

    அந்த திட்டத்தின்படி சென்னை மாநகரில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. ஆனால் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், சிங்கார சென்னை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    தொடர்ந்து 10 ஆண்டுகள் அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்ததால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது
    மு.க.ஸ்டாலின்
    முதல்-அமைச்சராகி இருப்பதால் அந்த திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. தனது கனவு திட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியிருக்கிறார்.

    சென்னை நகரின் பிரதான மேம்பாலங்களான எழும்பூர் பாந்தியன் சாலை மேம்பாலம், ஆழ்வார்பேட்டை ஜி.கே. மூப்பனார் பாலம், சர்தார் படேல் மேம்பாலம் ஆகியவை சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. மேலும் பிரதான சாலையில் உள்ள மின்விளக்குகள் புதுப்பிக்கப்பட உள்ளன.

    மேம்பால தூண்களில் வெர்ட்டிக்கல் கார்டன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் வண்ணமயமாக காட்சியளிக்கும் வகையில் வண்ண வண்ண மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இதே போல் பாலங்களின் அடிப்பகுதியில் உள்ள காலியிடங்களில் பூந்தோட்டங்கள், நவீன பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகள் உருவாக்கப்படுகின்றன.


    மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து அலங்கரிப்பது மட்டுமின்றி, பல்வேறு மக்கள் நல திட்டங்களும் செய்யப்பட உள்ளன. மாணவர்களுக்கு அறிவியல் பூங்கா, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு பிரத்யேக பூங்கா உள்ளிட்டவைகளும் அமைக்கப்படுகின்றன.

    சென்னை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு சர்வதேச பள்ளி போன்று நவீனமாக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட உள்ளன. மேலும் எழும்பூர், கிண்டி ஆகிய ரெயில் நிலைய பகுதிகள் சீரமைத்து புதுப்பிக்கப்படுகின்றன.

    சென்னை மாநகரில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை அதிகரிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுவார்கள். காற்று மாசுவை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டம் முடிந்தவுடன் சென்னை நகரம் சர்வதேச நகரங்களை போன்று அழகாக மாறும்.
    Next Story
    ×