search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    ஓபிசி பிரிவினருக்கு தாமதமின்றி மருத்துவ இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

    அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவாகக் கூறிவிட்டது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத்தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விட, அதை தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. இது சிறிதும் நியாயமற்றதாகும்.

    அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி பெறவோ, தகவல் தெரிவிக்கவோ எந்த தேவையும் இல்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் அதற்காக கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளையும் மிகவும் தெளிவாக வகுத்துக் கொடுத்துவிட்டது.

    அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவாகக் கூறிவிட்டது.

    கோப்புபடம்

    இத்தகைய சூழலில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை இது தொடர்பாக அணுகுவது தேவையற்ற சிக்கலையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தும். அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி, அது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டால் சலோனி குமார் வழக்கே இல்லாமல் போய்விடும். அதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது நீதியாக இருக்காது.

    மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பிற்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இன்னும் மறுக்கப்படுவது நியாயமற்றது. எனவே, 5 உறுப்பினர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில், கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

    எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான சட்டம் வரும் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடப்புக் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×