search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உடுமலை பகுதியில் கொற்றவை வழிபாடு குறித்து ஆய்வு

    கரப்பாடி, களந்தை உள்ளிட்ட இடங்களில் கொற்றவை வழிபாட்டுக்கான பல்வேறு புராதன சின்னங்கள் வரலாற்று ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை, நெகமம்,பொள்ளாச்சி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகள் 13-ம் நூற்றாண்டு வரை சிற்றரசர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது.அப்போதிருந்த கோவில்களில் வழிபாடு மற்றும் இதர திருவிழாக்களுக்காக ஏராளமான நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டுகள் கடத்தூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் உட்பட பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.இதில் தொன்மை வாய்ந்த கொற்றவை தாய் வழிபாடு கொங்குநாடு பகுதியில் அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    சிற்றரசர்களுக்கு பிறகு பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு இடங்களில் வீரகம்பங்கள் உருவாக்கப்பட்டு தற்போதும் உயிர்ப்போடு வழிபாட்டில் உள்ளன.இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில்  தொன்மையான கொற்றவை வழிபாடு குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் சமீபத்தில் உடுமலை அருகே பண்ணைக்கிணறு கிராமத்தில் தனியார் விளைநிலத்தில் சிதலமடைந்த கோவிலில் கொற்றவை வழிபாட்டுக்கான சில புராதன சின்னங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

    இதுகுறித்து ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 

    தென்கொங்கு நாட்டு பகுதியில் கரப்பாடி, களந்தை உள்ளிட்ட இடங்களில் கொற்றவை வழிபாட்டுக்கான பல்வேறு புராதன சின்னங்கள் வரலாற்று ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில் இத்தகைய தொன்மை வாய்ந்த கொற்றவை வழிபாடு குறித்த ஆய்வுகள் தொடர்கிறது என்றனர்.பண்ணைக்கிணறு கிராமத்தில் சிதலமடைந்து காணப்படும் கோவில் மற்றும் அதிலுள்ள சிற்பங்கள் குறித்து பெறப்பட்ட தகவல், பெண் குலதெய்வம் மற்றும் கொற்றவை வழிபாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் வீரகம்பம் வழிபாடு இன்றும் தொடர்கிறது.கொங்கு நாடு பகுதியில் காலங்காலமாக வழிபட்டு வந்த குலதெய்வ வழிபாட்டின் எச்சமாகவே இத்தகைய புராதன சின்னங்கள் இருக்கிறது என ஜி.வி.ஜி., கல்லூரி வரலாற்று பேராசிரியர் கற்பகவள்ளி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×