search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    ஒரே பகுதியில் 2 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்- அமைச்சர் தகவல்

    தமிழகத்திலும் ‘டெல்டா பிளஸ்’ தொற்று கால்பதித்தது. ஒரே பகுதியில் 2 பேருக்கு தொற்று இருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெண் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னை கோட்டூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த நர்சு அன்பரசி என்பது தெரியவந்துள்ளது. முதல் அலைக்கும், 2-வது அலைக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின்போது, இவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    அதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் அவருக்கு ‘டெல்டா பிளஸ்’ தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவர் பூரண குணமடைந்து, தற்போது பணிக்கும் சென்று கொண்டிருக்கிறார்.

    மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணுக்கு டெல்டா பிளஸ் தொற்று எப்படி பாதித்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    இந்த தொற்று வீரியமிக்கது என்றாலும் தொடர் சிகிச்சை அளித்து அதனை குணப்படுத்தலாம். பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியது இல்லை. அதேபோல வெளிநாடுகளில் இந்த வைரஸ் பரவியபோது கூட தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். டெல்டா பிளஸ் குறித்து மருத்துவ வல்லுனர்கள் தொடர் ஆய்வும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

    இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 1 கோடியே 38 லட்சத்து 15 ஆயிரத்து 660 தடுப்பூசிகள் வந்துள்ளது. இதுவரை 1 கோடியே 28 லட்சத்து 27 ஆயிரத்து 184 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 8 லட்சம் அளவில் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்துள்ளது.

    தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் அளவில் தடுப்பூசி போடப்படுகிறது. அந்தவகையில் பொதுமக்கள் அதிகம் கூடும், நினைவிடம் உள்ள பகுதிகள், சுற்றுலா தலங்கள் போன்ற முக்கிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் இறுதிக்குள் நீலகிரியில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும்.

    உலக முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிற வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற புனித தலங்கள் இருக்கிற ஊராட்சிகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அங்கு அந்த பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு முன்மாதிரியாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு, 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே காஷ்மீரில் உள்ள பந்திப்பூரா மாவட்டத்தில் உள்ள வேகான் கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது. அதற்கடுத்தப்படியாக தமிழகத்தில் காட்டூர் கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைப்பட்டால், வீட்டு வாசலிலே சென்று பரிசோதனை செய்யக் கூடிய நிலை உருவாகும்.

    ஒரே பகுதியில் 2 பேருக்கு மேல் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்றார்.
    Next Story
    ×