search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ. பன்னீர் செல்வம்
    X
    ஓ. பன்னீர் செல்வம்

    காவல்துறை அத்துமீறல்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

    சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஓ. பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஓ. பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களின் நண்பான விளங்க வேண்டிய காவல்துறை பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதை பார்க்கும்போது, முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள்தான் பொதுமக்களின் நினைவிற்கு வருகின்றன.

    சில நாட்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம் மலையடிப்பட்டி குறிஞ்சி நகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான பாலமுருகன் என்பவர் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைத் தொகுப்பினை வாங்கச் சென்றபோது வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், பின் வீட்டிற்கு சென்றுவிட்ட அவரை, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர் பூட்ஸ் காலால் தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், இதற்கான வீடியோ வலைதளங்களில் பரவியதன் காரணமாக தொடர்புடைய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

    இதேபோன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரான்சிஸ் அந்தோணி என்பவர் ரேசன் கடையில் வாங்கிய அரிசியை தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது, புளியரை சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடமிருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்ததோடு, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது தந்தைதயை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருடை மகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தொடர்புடைய காவல்துறையினர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையமும் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

    இந்தச் சூழ்நிலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே இடையப்பட்டி வில்வனூர் மேற்கு காட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்துள்ள நிலையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்டோர் மிகப்பெரிய பேராட்டத்தில் ஈடுபட்டு அவை பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்தத பிறகுதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

    பத்திரிகைகளில் வெளிவராத நிகழ்வுகள் நிறைய இருக்கக் கூடும். தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, தவறு செய்திருந்தால், தொடர்புடைய நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதற்கான ஆதாரங்களை திரட்டி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல் துறையினரே தாக்குதல் நடத்துவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மனித உரிமை மீறும் செயல்.

    எனவே, முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, இதுபோன்ற காவல்துறை அத்துமீறல்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×