search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நெல்லையில் நில புரோக்கர் அடித்துக்கொலை- போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது

    நெல்லையில் நில புரோக்கர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை என்.ஜி.ஓ. ‘பி’ காலனியை சேர்ந்தவர் அருள் விசுவாசம் (வயது48). நில புரோக்கர். இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தங்கராஜ் என்பவரின் மகன் ஆகும்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த மரியசிலுவை (44), மணிகண்டன் (42), எம்.எல். பிள்ளை நகர் ஏசுபால் (43) ஆகியோருடன் நண்பர்களாக பழகி வந்தார். இதில் மணிகண்டன் பழவூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். 4 பேரும் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். மேலும், நிலம் வாங்கி விற்பதிலும் கூட்டாக செயல்பட்டு உள்ளனர்.

    சம்பவத்தன்று அருள் விசுவாசம், ஏசுபால், மணிகண்டன், மரிய சிலுவை ஆகிய 4 பேரும் என்.ஜி.ஓ. காலனி அருகே ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது நிலம் விற்ற வகையில் பணத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஏசுபால், மணிகண்டன், மரிய சிலுவை ஆகிய 3 பேரும் சேர்ந்து அருள் விசுவாசத்தை சரமாரியாக தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவரை நண்பர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு அவரது வீட்டருகே விட்டு விட்டு சென்று விட்டனர்.

    படுகாயத்துடன் வீட்டிற்கு வந்த அருள் விசுவாசத்தை அவரது மனைவி மேரி கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அருள் விசுவாசத்தை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவரது உடல் நிலை மிகவும் மோசமானது.

    இதைத்தொடர்ந்து நேற்று அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு அருள் விசுவாசம் பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் மணிகண்டன், மரிய சிலுவை, ஏசுபால் ஆகிய 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இன்று அதிகாலை ஏசுபால், மணிகண்டன், மரிய சிலுவை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    போலீஸ்காரர் மணிகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மது குடித்த பிரச்சனை காரணாக அவர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். சமீபத்தில் தான் மீண்டும் பணிக்கு சேர்ந்து பழவூர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்துள்ளார்.

    அங்கு தனக்கு விபத்து ஏற்பட்டதாக கூறி மணிகண்டன் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×