search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 492 கன அடியாக அதிகரிப்பு

    கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 10 ஆயிரம் கன அடி தண்ணீர் முற்றிலுமாக ஒகேனக்கல் வந்தடைந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு வரும் உபரி நீர் அதிகரித்து வருகிறது.

    அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தலா 5 ஆயிரம் வீதம் என மொத்தம் 10 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 10 ஆயிரம் கன அடி தண்ணீர் முற்றிலுமாக ஒகேனக்கல் வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நேற்று அதிகாலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகரித்தது. இது படிப்படியாக உயர்ந்து இன்று காலை வினாடிக்கு 7 ஆயிரத்து 492 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு நொடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நேற்று 89.36 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 89.15 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 51.68 டி.எம்.சி.யாக உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×