search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்மமான முறையில் இறந்த பெண் குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.
    X
    மர்மமான முறையில் இறந்த பெண் குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.

    பெண் குழந்தை மர்மச்சாவு-உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை

    தனலட்சுமியையும், அவரது குழந்தையையும் காணாததால் அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தேடி உள்ளனர்.
    பல்லடம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சண்முகம் (வயது 46). தனியார் பஸ் டிரைவர். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜே.கே.ஜே. காலனியில் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் தனலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 12-ந்தேதி பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது தனலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக குழந்தையுடன் ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பிவைத்தனர்.அங்கு தனலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையில் திடீரென ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு தெரியாமல் கணவர் சண்முகம் மற்றும் குழந்தையுடன் பல்லடத்தில் உள்ள வீட்டிற்கு தனலட்சுமி சென்றுவிட்டார். இதனால் தனலட்சுமியையும், அவரது  குழந்தையையும் காணாததால் அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தேடி உள்ளனர். இதுகுறித்து பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டில் தனலட்சுமி இருந்தார். ஆனால் குழந்தை இல்லை. அதிர்ச்சியடைந்த மருத்துவ பணியாளர்கள் தனலட்சுமியிடம் விசாரணை நடத்தியபோது, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் தனலட்சுமி கட்டைப்பையில் துணிகளுக்கு இடையே குழந்தையை வைத்து வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும், வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் உறவினர்கள் யாரும் இல்லாததால் பூமலூர் ரோட்டில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது.இதையடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்தநிலையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவையில் இருந்து மருத்துவ குழுவினர், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். பல்லடம் தாசில்தார் தேவராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குழந்தையை புதைத்த இடத்திற்கு பெற்றோர் சண்முகம், தனலட்சுமி ஆகியோரை அழைத்து சென்றனர். அங்கு குழந்தை புதைத்த இடத்தை சண்முகம் அடையாளம் காட்டினார். 

    இதையடுத்து அந்த இடத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோரே கொன்று புதைத்தனரா? அல்லது ஆஸ்பத்திரியில் இருந்து கட்டைப்பையில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றபோது மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்ததா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை மரணம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×