search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 1000 டன்னை கடந்தது

    ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் 13-ந் தேதி மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
    தூத்துக்குடி:

    நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் 13-ந் தேதி மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

    இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வினியோகம் 1000 மெட்ரிக் டன்னை நேற்று கடந்தது. இதனை முன்னிட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1000 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகத்தை வெற்றிகரமாக கடந்துள்ளோம். நேற்று ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 16.5 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இதுவரை 1006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை தவிர இதுவரை 712 வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள் (7.12 டன்) வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

    இங்கு இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×