search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    எந்திரம் தட்டுப்பாட்டால் பாதிக்கும் அறுவடை பணிகள்

    நெல் சாகுபடியில் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளே ஈடுபட்டு வருவதால் எந்திரங்களை நிரந்தரமாக வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
    உடுமலை:

    உடுமலை அமராவதி அணை பாசனத்தின் பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. அணையின் நீர் இருப்பை பொறுத்து முப்போகமாக நெல் சாகுபடியாகிறது.தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சாகுபடியில் எந்திரங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. 

    நடவு முதல் அறுவடை வரை எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.ஆனால் நெல் சாகுபடியில் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளே ஈடுபட்டு வருவதால் எந்திரங்களை நிரந்தரமாக வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.தற்போது சீசன் சமயங்களில் பிற மாவட்டங்களில் இருந்து எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உடுமலை பகுதி விளைநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.ஆனால்போதிய எந்திரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டியுள்ளது.

    தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கான அறுவடையை உடனடியாக முடிக்காவிட்டால் மழையால் நெற்கதிர்கள் பாதிக்கும். எனவே அவசர கதியில் பழைய ஆயக்கட்டு பகுதியில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    அறுவடைக்கு எந்திரத்தை பயன்படுத்துவதால் வைக்கோலை கட்டுகளாக கட்டிவிடமுடியும். குறுகிய நேரத்தில் நெல்லை பிரித்து உலர் களத்துக்கு கொண்டு செல்லலாம். அறுவடைக்கு பெல்ட் மற்றும் டயர் வடிவமைப்பு கொண்ட இருவகை எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேவையை பொறுத்து எந்திரத்துக்கு ரூ.1,200ல் இருந்து ரூ.2800 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.நெல் சாகுபடி பிரதானமாக உள்ள தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பொறியியல் துறை சார்பில்  நெல் அறுவடை எந்திரங்கள் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது.அவ்வகையில்  அமராவதி அணை பாசனத்தில் நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் திருப்பூர் மாவட்டத்திலும் வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் எந்திரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    உழவர் குழுக்கள் கட்டுப்பாட்டின் கீழ் எந்திரங்களை பராமரிக்க முடியும். இதனால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா பகுதி விவசாயிகள் பயன்பெற முடியும். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×