search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த அபிதாவை படத்தில் காணலாம்.
    X
    செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த அபிதாவை படத்தில் காணலாம்.

    செல்போன் கோபுரத்தில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்

    தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தனது வீட்டில் உள்ள ரேஷன் அரிசியை, புளியரையில் உள்ள சித்தப்பா சின்னச்சாமி வீட்டிற்கு கொண்டு சென்றார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த புளியரை போலீசார், பிரான்சிஸ் அந்தோணியிடம் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பிரான்சிஸ் அந்தோணியை, அவருடைய குடும்பத்தினர் மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் போலீ்சார் தனது குடும்பத்தை மிரட்டி வருவதாகவும், தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பிரான்சிஸ் அந்தோணியின் 2-வது மகள் அபிதா (22), நேற்று மாலையில் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் தனது கோரிக்கையை வலியுறுத்தி கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற அபிதாவை கீழே இறங்கும்படி ஒலிபெருக்கி மூலம் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். ஆனால் அபிதா, கீழே இறங்க மறுத்து விட்டார்.

    இரவு ஆன பின்னரும் அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அபிதா, முதல்-அமைச்சரிடம் தனது கோரிக்கையை தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என கூறினார்.

    இந்த நிலையில், அபிதாவின் பெற்றோர், அக்காள், தம்பி மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இரவு 9.20 மணியளவில் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி கீழே வந்தார். 5 மணி நேரமாக நடந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×