search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் இன்று முதல் 50 சவவீத தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கியதை படத்தில் காணலாம்.
    X
    ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் இன்று முதல் 50 சவவீத தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கியதை படத்தில் காணலாம்.

    50 சதவீத தொழிலாளர்களுடன் ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் இயங்கின

    உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 

    கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்ட தளர்வில் 10சதவீத தொழிலாளர்களுடனும், 14-ந்தேதி அறிவிக்கப்பட்ட தளர்வில் 25சதவீத தொழிலாளர்களுடனும் ஏற்றுமதி சார்ந்த பனியன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி 25சதவீத தொழிலாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டுவந்தன.

    குறைந்த தொழிலாளர்களுடன் இயங்கியதால் வெளிநாட்டு ஆர்டர்களை முடித்து கொடுப்பதில் உற்பத்தியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே கூடுதல் பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்க வேண்டுமென பின்னலாடை உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

    இந்தநிலையில் இன்றுமுதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் திருப்பூர் ஏற்றுமதி சார்ந்த பனியன் நிறுவனங்கள் 50சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  

    இதைத்தொடர்ந்து திருப்பூரில் இன்றுமுதல் பனியன் உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில்:

    25 சதவீத தொழிலாளருடன் சாம்பிள் ஆடை தயாரிப்பு நடைபெற்று வந்தது. தற்போது புதிய அறிவிப்பில், ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கூடுதல் தொழிலாளரை பணி அமர்த்துவதன்மூலம் உற்பத்தி சற்று வேகம்பெறும். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

    இதனிடையே உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:

    தமிழக அரசு ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. திருப்பூரில், உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஒருமாதத்துக்கும் மேல் முடங்கியுள்ளன.லூதியானா, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நாட்டின் பிற நகரங்களில் ஆடை உற்பத்தி துவங்கிவிட்டது. திருப்பூரில் உற்பத்தி நடைபெறாததால் உள்நாட்டு சந்தைக்கான ஆடை தயாரிப்பு ஆர்டர்கள், பிற மாநிலங்களை நோக்கி செல்கின்றன.தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர்.

    தொழில்முனைவோர் வர்த்தக பாதிப்பு, நிதிச்சுமையால் தத்தளிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் உள்நாட்டு சந்தையை திருப்பூர் இழக்கும் அபாயம் உருவாகும். அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கடிதம் அனுப்பி வருகிறோம். சமீபத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கலெக்டர் உட்பட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம்.ஆனால் அரசு அறிவிப்பில் திருப்பூருக்கு புதிய தளர்வுகள் மறுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை நீடிப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றார். 
     
    இதனிடையே ஊரடங்கின் போது சில பனியன் நிறுவனங்கள் விதிகளை மீறி இயங்கின.அந்த நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதுபோன்ற நிலை தற்போது ஏற்படாமல் இருக்க பனியன் நிறுவனங்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருப்பூரில் இயங்கி வரும் பனியன் நிறுவனங்களுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×