search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X
    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை- கவர்னர் உரை

    அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்படும்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

    இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ் நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்.

     

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பேட்டினை காணலாம்.

    சமூக நீதியின் லட்சியங்களை பாதுகாத்திடவும், சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தைப் பாதுகாத்திடவும் இந்த அரசு எப்போதும் பாடுபடும்.

    இதையும் படியுங்கள்....  கருணாநிதி அரசு பள்ளியில் எழுதிய குறிப்பை டுவிட்டரில் பதிவிட்ட கலெக்டர்

    தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

    ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.

    நமது மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பயண செலவுகளுக்கான தொகை வழங்கப்படும். அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களின் பணி நியமனம் திறம்பட செயல்படுத்தப்படும்.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்படும்.

    அனைத்து மாநிலங்களும் தலைநிமிர்ந்து நோக்கும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×