search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி- 2 பேர் கைது

    பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவையில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் மது பிரியர்கள் சில இடங்களில் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளை அடித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). இவர் கோவிந்தனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று டாஸ்மாக் கடை அருகே சென்றார். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் எதுவும் கொள்ளை போகாமல் இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் வடக்கிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொள்ளையர்கள் வடக்கிபாளையம் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

    போலீசார் அந்த வாலிபர்களை துரத்தி மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவிந்தனூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 26) மற்றும் அவரது நண்பர் விவேக் (26) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×