search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரோனா வைரஸ்
    X
    கோரோனா வைரஸ்

    கோவை புறநகர் பகுதியில் ஆர்வம் - தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்

    தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் கோவையில் மட்டும் கட்டுக்குள் வர மறுத்து ஆட்டம் காண்பிக்கிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக தீவிரமாக இருந்தது. தொற்று பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 1500, 1200, 1100 என்று பதிவாகி வந்தது.

    நேற்று புதிதாக 1,089 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் கோவையில் மட்டும் கட்டுக்குள் வர மறுத்து ஆட்டம் காண்பிக்கிறது. தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் பாதிப்பு 1000-த்திற்கும் அதிகமாக உள்ளது.

    தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதை அடுத்து கோவையில் வசிக்கும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாநகர் மற்றும் புறநகர், கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு தடுப்பூசி முகாம்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    மாவட்டத்தில் தற்போது குறைவான அளவே தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக இன்று மாநகர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது என்றும், புறநகர் பகுதிகளில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான நரசிம்ம நாயக்கன்பாளையம் அரசு பள்ளி, மதுக்கரை அரசு பள்ளி, தொண்டாமுத்தூர் காளம்பாளையம் அரசு பள்ளி, சூலூர் அரசு ஆஸ்பத்திரி, பெரிய நாயக்கன் பாளையம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

    இந்த மையங்களில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம், கூட்டமாக குடும்பத்துடன் வந்தனர். அவர்கள் அங்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் டோக்கன் கொடுத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோவை துடியலூர் அடுத்துள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 500 கோவி ஷீல்டு மற்றும் 100 கோவாக்சின் தடுப்பூசி போடப்படுவதாக வந்த தகவலை அடுத்து அதிகாலை 4 மணியளவில் இருந்தே பொதுமக்கள் அங்கு குவிந்தனர். தற்போது அந்த மையத்தின் முன்பு 600-க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் டோக்கன் வழங்கி தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

    Next Story
    ×