search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யபட்ட சுஷ்மிதா
    X
    கைது செய்யபட்ட சுஷ்மிதா

    சிவசங்கர் பாபா வழக்கில் திருப்பம்- மாணவிகளை கட்டாயப்படுத்திய பெண் சீடர் கைது

    சிவசங்கர் பாபா வழக்கில் கைதான அவரது சீடர் சுஷ்மிதா, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஆவார். அவருக்கு பள்ளி வளாகத்திலேயே பாபா ஒரு வீடு கொடுத்துள்ளதாக தெரிகிறது.
    சென்னை:

    சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் சுசில் ஹரி இன்டர்நேசனல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை நிறுவியவர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா (வயது 78). இவரது பள்ளியில் படித்த 3 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார்கள் அடிப்படையில் 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்குகள் போக்சோ சட்டப்பிரிவை அடிப்படையாக கொண்டவை.

    இந்த வழக்குகளில்தான் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவசங்கர்பாபா மீது அவரது பள்ளியில் படித்து, அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வெளிநாடுகளில் தற்போது வாழும் முன்னாள் மாணவிகள் சிலரும் பாபா மீது புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்.

    சிவசங்கர் பாபா மீதான வழக்கில் நேற்று அதிரடி திருப்பமாக அவரது பெண் சீடர் சுஷ்மிதாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த இவர் சிவசங்கர்பாபாவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் என்றும், மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவின் காம விளையாட்டுகளுக்கு இவர்தான் அனுப்பி வைப்பார் என்றும் புகார் கூறப்பட்டது.

    சிவசங்கர் பாபா சொகுசு பங்களா

    புகார் கொடுத்துள்ள 3 முன்னாள் மாணவிகளில் ஒருவர், சுஷ்மிதாதான் என்னை பெரிய ஆளாக கொண்டுவருவதாக ஆசை காட்டி, பாபாவின் சொகுசு பங்களாவுக்கு அழைத்துச்சென்று நாசப்படுத்தினார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில் சுஷ்மிதாவும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று
    சி.பி.சி.ஐ.டி.
    போலீசார் தெரிவித்தனர். சுஷ்மிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சென்னையில் வசிக்கிறார்கள்.

    சிவசங்கர் பாபாவின் பள்ளி வளாகத்தில் அவர் வசித்த சொகுசு பங்களா உள்ளது. அதில்தான், மாணவிகளிடம் காமலீலைகளை பாபா அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. அந்த சொகுசு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீஸ் படையுடன் சென்று நேற்று 3 மணி நேரம் சோதனை நடத்தினார்.

    அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் அந்த பங்களாவில் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சிவசங்கர் பாபாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் செங்கல்பட்டு பெண்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது திங்கட்கிழமை விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. சிவசங்கர் பாபா மீது தொடர்ந்து திடுக்கிடும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதையும் படியுங்கள்...சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு 

    சிவசங்கர் பாபா வழக்கில் கைதான அவரது சீடர் சுஷ்மிதா, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஆவார். பட்டப்படிப்பு படித்துள்ள அவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தவர். அவருக்கு பள்ளி வளாகத்திலேயே பாபா ஒரு வீடு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

    ஆனால் சுஷ்மிதா திருமணம் ஆன பிறகு கணவருடன் சென்னையில் வாழ்வதாக கூறப்படுகிறது. அவருக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. குழந்தையை கணவர் மற்றும் தாய்-தந்தையிடம் சுஷ்மிதா விட்டுள்ளார். போலீசார் கைது செய்த போது, சுஷ்மிதா கதறி அழுததாக கூறப்படுகிறது. அவர் துபாய் தப்பிச்செல்ல திட்டமிட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஒரு நாள் தாமதித்திருந்தால் கூட சுஷ்மிதா துபாய் சென்றிருப்பார் என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×