search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்து அங்கு சமைத்த உணவை சாப்பிட்டு் பார்த்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்து அங்கு சமைத்த உணவை சாப்பிட்டு் பார்த்த போது எடுத்த படம்.

    கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கலெக்டர் ஆய்வு - சாப்பிட்டு பார்த்து பாராட்டினார்

    கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கலெக்டர் முரளிதரன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
    தேனி:

    தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள ரேஷன் கடைக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீரென சென்றார். அங்கு அவர் தமிழக அரசின் சார்பில், கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் 2-வது தவணை தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்த அவர், சமூக இடைவெளியை கடைபிடித்தும், மக்களுக்கு தாமதமின்றியும் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    பின்னர், தேனி அரசு பழைய மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்துக்கு கலெக்டர் முரளிதரன் சென்றார். அங்கு மருத்துவ குழுவினரை சந்தித்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், உணவுகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கும் உணவின் தரத்தை பரிசோதித்து பார்க்க விரும்புவதாகவும், அவற்றை எடுத்து வருமாறும் கலெக்டர் கூறினார்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்கள், உணவு வெளியே வேறு இடத்தில் சமைத்து எடுத்து வரப்படுவதாகவும், மதிய உணவு வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு, கருவேல்நாயக்கன்பட்டியில் உணவு சமைக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு பணியாளர்கள் சிலர் உணவை பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை கேட்டறிந்தார். பின்னர் அங்கு சமைத்த உணவை கலெக்டர் சாப்பிட்டு அதன் தரத்தை பரிசோதனை செய்தார். உணவு சுவையாக இருப்பதாக கூறி சமையல் செய்தவர்களை கலெக்டர் பாராட்டினார்.

    பின்னர், தேனி தாலுகா அலுவலகத்துக்கு கலெக்டர் சென்றார். அங்கு 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அந்த மனுக்களை மறுபரிசீலனை செய்து தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×