search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

    மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மாதம் 10-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் கடந்த 14-ந்தேதி முதல் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. வினர் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி திண்டுக்கல் பாரதிபுரத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கோபால் தலைமையில் அவருடைய வீட்டின் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியில் பா.ம.க. சார்பில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட அமைப்புச் செயலாளர் திருப்பதி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட துணை செயலாளர் சோழராஜன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பா.ம.க.வினர் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடியை ஏந்தியபடி பங்கேற்றனர். மேலும் கொரோனா காலமாக இருப்பதால் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். அதோடு பூரண மதுவிலக்கை அமல்படுத்த அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    பழனியில் திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில், செயலாளர் வைரமுத்து தலைமையில் பா.ம.க.வினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாகீர்உசேன், மாணவர் அணி மாநில துணை செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    வேடசந்தூர் அருகே உள்ள மகாலட்சுமிபுரத்தில் பா.ம.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மதுபாட்டில்களுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டு சென்று குழி தோண்டி புதைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி செயலாளர் சிவராஜா, இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×