search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆனதன் மூலம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் நேற்று முதல் முறையாக அரசு முறை பயணமாக டெல்லி சென்றார்.

    நேற்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
    30 நிமிடம் அவர்கள் பேசினார்கள். அப்போது மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

    அதன் பிறகு தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய மு.க.ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை முக்கிய அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் அவரை சந்தித்தார்கள்.

    கூட்டணி கட்சியான காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியை இன்று காலை சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    அதன்படி காலை 9.50 மணியளவில் மு.க.ஸ்டாலின் ஜன்பத் சாலையில் உள்ள சோனியாகாந்தி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு சோனியா காந்தியை அவர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது ராகுல்காந்தியும் உடன் இருந்தார்.

    தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளதற்காக சோனியாவும், ராகுல் காந்தியும் முதலில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

    பின்னர் தற்போதைய அரசியல் நிலவரங்கள், எதிர்கால திட்டங்கள் தொடர்பாக பேசினார்கள். பாராளுமன்ற கூட்டங்களில் காங்கிரஸ்- தி.மு.க. எவ்வாறு செயல்படுவது? என்று அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    மேலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது தொடர்பாக சரத்பவார், மம்தா பானர்ஜி எடுக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.


    முக்கிய நடவடிக்கைகளில் காங்கிரசும் தி.மு.க.வும் தொடர்ந்து இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் பேசினார்கள். சோனியாவுடனான சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது.

    அதன் பின்னர் விமான நிலையத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்பட்டார். பிற்பகலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்.

    முதலமைச்சர் முக ஸ்டாலின்-சோனியா காந்தி சந்திப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் டெல்லி பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அவர் டெல்லி சென்றது, பிரதமர் மற்றும் சோனியாவுடனான சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆனதன் மூலம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார். எனவே அவருடைய டெல்லி பயணம் தேசிய அரசியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
    Next Story
    ×