search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    யூடியூப் மதன் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    மதனின் யூடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள். ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.
    சென்னை:

    யூடியூப் விளையாட்டில் மதனின் பேச்சுகளை காதுகொடுத்து கேட்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது என்றும் அவரது ஆபாச பேச்சுகளை முழுமையாக கேட்ட பின்னர் அவருக்கு முன்ஜாமீன் கேட்டு வாதிடும்படி அவரது வக்கீலுக்கு ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    என்ஜினீயரிங் பட்டதாரி மதன்குமார் (வயது 29) என்பவர், தடை செய்யப்பட்ட ‘பப்ஜி' ஆன்-லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து நடத்தி வந்தார். இந்த சேனலில் சிறுவர்கள் அதிகம் பேர் ‘பப்ஜி' விளையாட்டை விரும்பி விளையாடியுள்ளனர்.

    அந்த சேனலில் பெண்களை பற்றியும், அவர்களது உடல் அங்கம் குறித்தும் ஆபாசமாக பேசி பதிவுகளை மதன்குமார் வெளியிட்டு வந்தார். இதன்மூலம் லட்சக்கணக்கில் பணம் அவருக்கு கிடைத்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்படி மதன்குமார் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் மதன்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மதன்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    மதன்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் மதன் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இவரால் பாதிக்கப்பட்டதாக கூறி யாரும் புகார் அளிக்கவில்லை’’ என்று வாதிட்டார்.

    போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மதனின் யூடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள். ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர். மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்று வாதிட்டார்.

    பின்னர், மதனின் ஆபாச பேச்சுகளின் ஆடியோ பதிவை நீதிபதியிடம் கொடுத்தார். அந்த ஆபாச பேச்சை கேட்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே நீதிபதி, ‘மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியாத அளவிற்கு உள்ளது' என்றார்.

    ‘‘யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?’’ என மனுதாரர் வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அவர், வழக்கிற்காக சில பகுதிகளை மட்டும் கேட்டதாக கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘‘அந்த ஆபாச பதிவுகள் முழுவதையும் கேட்டுவிட்டு மதனின் முன்ஜாமீன் மனு மீது வாதிடுங்கள்’’ என்று உத்தரவிட்டார்.

    இந்த முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் தர்மபுரியில் மதன் கைது செய்யப்பட்ட தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து மதன் கைது செய்யப்பட்டுள்ளதால், மதன் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை மேற்கொண்டு தொடர விருப்பமில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என முன்ஜாமீன் வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×