search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்று கொண்ட போது எடுத்த படம்.
    X
    கரூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்று கொண்ட போது எடுத்த படம்.

    தடுப்பூசி போட்டு கொண்டால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூரை உருவாக்கலாம் - புதிய கலெக்டர் பேட்டி

    அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூரை உருவாக்கலாம் என கரூர் மாவட்ட புதிய கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரசாந்த் மு.வடநேரே மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக பிரபுசங்கர் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை கரூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையிலேயே என்னுடைய செயல்பாடுகள் இருக்கும்.

    பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சீரிய முறையில் தீர்ப்பதற்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் நிலை உருவாக்கப்படும். மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்தில் நான் செயல்படுவேன்.

    வேளாண்மை, தொழில்துறை, சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தியும், மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில் மின்சாரத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு தனிக்கவனம் செலுத்தப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

    உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொ ரோனா தொற்றின் 2-வது அலை நமது முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால், தொடர்ந்து எடுக்கப்பட்ட போர்க்கால நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நமது கரூர் மாவட்டத்திலும் தொற்று கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், கொரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தற்போதைய தலையாய பணியாக இருக்கும்.

    இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக, கோரிக்கையாக நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், அனைவரும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து, கொரோனா தொற்று தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறிளார்.

    கரூர் மாவட்ட புதிய கலெக்டர் பிரபுசங்கரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகும். மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். பின்னர் சண்டிகரில் எம்.டி. மேல்படிப்பு படித்து, பின்னர் சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவக்கல்லூரியில் 3 ஆண்டுகள் உதவிப்பேராசிரியராக பணியாற்றினார். 2013-ம் ஆண்டு அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து குடிமைப்பணிக்கு தேர்வானார். பயிற்சி உதவி கலெக்டராக விழுப்புரத்தில் பணியாற்றினார்.

    பின்னர் மத்திய அரசின் வேளாண்துறையில் உதவி செயலராக பணியாற்றினார். பின்னர் திருவண்ணாமலை செய்யாறு மற்றும் திண்டிவனம் பகுதிகளில் உதவி கலெக்டராக பணிபுரிந்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தில் செயல் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தில் செய்யாறு மற்றும் திண்டிவனத்தில் சுமார் 4,000 பழங்குடியினருக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×