search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருஞ்சாணி அணை
    X
    பெருஞ்சாணி அணை

    குமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    பேச்சிப்பாறை அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதையடுத்து அணையில் இருந்து அதிக தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது.

    அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதையடுத்து அணையில் இருந்து அதிக தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு-1 அணையில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, சிற்றாறு-1 அணையில் இருந்து 1,560 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறையாறு, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பெருஞ்சாணிக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 72 அடியை எட்டியது. அணைக்கு 1,422 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 700 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.23 அடியாக உள்ளது. அணைக்கு 1,242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,292 தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 289 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 268 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மழைக்கு நேற்று ஒரே நாளில் 6 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 1 வீடும் இடிந்து சேதமடைந்துள்ளது.

    Next Story
    ×