search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததற்கு தடை இல்லை- ஐகோர்ட்டு உத்தரவு

    சி.பி.எஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கும் 90 சதவீத பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடைபெற்றுள்ளன.
    சென்னை:

    கொரோனா 2-வது அலை பரவி வருவதை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் கடந்த 5-ந் தேதி 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா முதலாவது அலையால் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகள்தான் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மாநில அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் அரசு பாடத்திட்டத்தை ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகள் உள்ளன.

    இதில் 2020-2021 கல்வியாண்டில் 90 சதவீத அரசுப் பள்ளிகளிலும், 80 சதவீத அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளிலும், 50 சதவீத ஆங்கிலவழி தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தவில்லை.

    ஆனால் சி.பி.எஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கும் 90 சதவீத பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடைபெற்றுள்ளன.

    கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.இ. மற்றும் அனைத்து மாநில கல்வி இயக்கங்களும் 12-ம் வகுப்புகளை நடத்தி முடித்து இருந்தனர். அதனால் அனைத்துவகையான மேற்படிப்புகளுக்கும் அவர்களின் பள்ளி இறுதித்தேர்வின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற்றது.

    தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், மேற்படிப்பு வகுப்புகளின் மாணவர்கள் சேர்க்கை தகுதியை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்படும்.

    பல்கலைக்கழக மானிய குழு, (யு.ஜி.சி.,) மருத்துவ கவுன்சில், அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) நர்சிங் கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், பார் கவுன்சில் ஆகிய அமைப்புகளுடன் கலந்து முடிவு எடுக்காமல், தமிழக கல்வித்துறை 12-ம் வகுப்பு இறுதி தேர்வை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு.

    பொதுத்தேர்வை ரத்து செய்தது, முறையாக பயின்ற மாணவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துவதாகும். கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து தேர்வை நடத்த தமிழக அரசு முயற்சித்திருக்கலாம்.

    எனவே, தமிழக அரசு உடனடியாக கல்வியாளர்களை கொண்டு ஒரு குழு அமைத்து, 12-ம் வகுப்பு பயில்பவர்களுக்கு தேர்வை ரத்து செய்யாமல், சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்றிரண்டு மாதங்களுக்கு பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த உத்தரவிடவும் வேண்டும்.

    இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர், தற்போது எந்த ஒரு இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், இந்த வழக்குக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×